Saturday, December 28, 2013

முலே சாஸ்திரி - 1


        குருவின் மஹாத்மியத்தைப் பிரகாசப்படுத்தும் சுவாரசியமான இந்தக் காதையை அவசியம் கேளுங்கள். குருபக்தர்களுக்குத் தம்முடைய பிரேமையை ஸாயீ அளிப்பதை நிதரிசனமாகத் தெரிந்துகொள்ளலாம்.
        ஒரு சமயம் நாசிக் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தி­ருந்து, சடங்குச்செல்வரும் ஆசாரசீலரும் அக்கினிஹோத்திரியுமான முலே சாஸ்திரி என்பவர் பூர்வபுண்ணிய பலத்தால் சிர்டீக்கு வந்தார்.
      முலே, ஸ்ரீமான் புட்டியைச் சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் சிர்டீக்கு வந்தார்.  அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹஸியமான திட்டம் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.
        முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியைச் சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்குப் போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்லவேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார்.
        முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; ஸாமுத்திரிகா லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர். பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்துபோனார்.
        அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்குப் பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய் போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர்.
        மேலும், கொய்யாப்பழம், வாழைப்பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப்பட்டபோது, தாமே பாக்கெட்டி­ருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார்.
         தம்முடைய பணத்தைச் செலவுசெய்து கூடைகூடையாக மாம்பழங்களோ அல்லது குலைகுலையாக வாழைப்பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்.
         ஒவ்வொரு மாம்பழமாகக் கையில் எடுத்துக்கொள்வார். இரு உள்ளங்கைகளாலும் அழுத்தித் தேய்த்துக் கொளகொளவென்று செய்துவிடுவார். அதன்பிறகு ரஸத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார்.
        இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப்பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரஸத்தையெல்லாம் ஒரு பாத்திரத்தி­ருந்து குடிப்பதுபோலக் குடித்துவிடலாம். தோலையும் கொட்டையையும் மாத்திரம் எறிந்துவிடலாம்.
       வாழைப்பழங்களை அவர் கையாண்டவிதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தாம் தோலைத் தின்பார். ஓ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவை!
      பழங்களையெல்லாம் தம்முடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அவர் உண்பதென்னவோ எப்போதோ ஒரே ஒரு பழம்.
      எப்பொழுதும்போல, பாபா அன்று கூடைகூடையாக வாழைப்பழங்கள் வாங்கி விநியோகம் செய்துகொண் டிருந்தார்.  முலே சாஸ்திரி பாபாவினுடைய திருவடிகளைக் கண்டு ஆச்சரியமடைந்து, கொடி, வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கின்றனவா என்று பார்த்தறிய விரும்பினார்.
      காகாஸாஹேப் தீக்ஷிதர் அப்பொழுது அருகி­ருந்தார்; நான்கு வாழைப்பழங்களை எடுத்து பாபாவின் கைகளில் வைத்தார்.
       ''பாபா, இவர் புண்ணிய க்ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார். இந்தப் பழங்களை அவருக்குப் பிரஸாதமாகக் கொடுங்கள் என்று சொல்­லி பாபாவை உந்தினார்.
      யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார். ஆகவே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது?
      மேலும், முலே சாஸ்திரிக்கு வாழைப்பழம் வேண்டா; பாபாவினுடைய கைரேகைகளைப் பார்க்கவே விரும்பினார். இதற்காகவே அவர் தம்முடைய கையை நீட்டினார். பாபா இதைக் கண்டுகொள்ளவில்லை; பிரஸாதம் விநியோகிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
      முலே பாபாவிடம் வேண்டினார், ''எனக்குப் பழம் வேண்டா; உங்களுடைய கையைக் காட்டுங்கள்; ஸாமுத்திரிகா (லக்ஷணத்தின்படி) பலன் சொல்கிறேன். ஆனால், பாபா கையைக் காட்ட அடியோடு மறுத்துவிட்டார்.
       இதன் தொடர்ச்சி நாளை காணலாம்.....



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...