Saturday, January 25, 2014

நரசிம்மசுவாமி - தொடர் பாகம் 1


நரசிம்மசுவாமி

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ சாயிபாபா கோயில் சென்றவர்கள் அனைவர் மனத்திலும் நிறைந்திருப்பவர் நரசிம்மசுவாமி.  சாயி மகிமைகளை நாடெங்கும் ஏன் அகிலமெங்கும் பரப்பியதில் முக்கியமானவர்களில் ஒருவர்.

சாயி சமாதி அடைந்தும் பன்னிரண்டு ஆண்டுகள் வரை அவர் புகழ் மிகப் பெரிய அளவில் பரவவில்லை.  ஏனெனில் சாயியே இப்பணியினை நரசிம்மசுவாமிக்கு ஒதுக்கியிருந்தார் போலும்.       சாதாரணமாக நாமும் பல கடவுளை வழிபடுகிறோம்.  அதற்கு ஒரு பெரிய விலையினை கடவுளிடம் பேரம் பேசுகிறோம். கேட்ட பலன் கிடைக்காவிட்டால் உடனே அடுத்த கடவுள். அங்கும் பேரம்.  ஓட்டம்...ஓட்டம்... அப்படியொரு ஓட்டம்...கடைசியில் நான் எத்தனையோ கடவுளை கும்பிட்டும் பலனில்லை என்று புலம்ப மட்டும் தவறுவது இல்லை.  ஆனால் இந்த மனிதரோ...ஞானம் தேடி புறப்பட்டார்.  மிகப்பெரிய தேடுதல்....குருவைத் தேடினார்..தேடினார்... என்ன ஒரு தேடல்... இனி அதை பார்ப்போமா....

சற்றே குட்டையான உருவம், தோளில் தொங்கிய ஜோல்னா பை இடுப்பில் தூய வேட்டி, வழுக்கைத் தலை, மிடுக்கான நடை இவையே அவர் உருவம். ஜோல்னா பையில் சீரடியில் இருந்து கொண்டு வந்திருந்த விபூதி, அவரே எழுதி இருந்த கை அடக்க சாயி அஷ்டோத்திரமாலை பிரதிகள். போஸ்ட் கார்டு அளவு சாயி பாபா படம். அவைகளையே தம்மிடம் வந்த தமது பக்தர்களுக்கு அவர் கொடுத்த பரிசுகள். 'சாயி பாபா பரிபூரண சித்திரஷ்டு' என்று வாய் முணுமுணுத்தபடியே இருந்தவாறு வாழ்ந்து வந்த அந்த மகான் சாயி பக்தர்களின் மனதில் என்றும் இருப்பவர்.

1940 ஆம் ஆண்டுவரை சாயி பாபா பற்றியோ சீரடி பற்றியோ பலருக்கும் தெரியாது. ஆனால் இன்றோ உலகின் அனைத்து இடங்களிலும், மூலையிலும் முடுக்கிலும் சாயி மன்றங்கள் நிறுவப்பட்டு , சாயி காலட்சேபங்களும்,  சேவைகளும் தொடர்கின்றன .

சாயிபாபாவின் பெயர்களைக் கொண்டு தொழிற்கூடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அந்த நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது என்றால் அதன் காரணம் 1956 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் துவங்கி, அனைத்து இடத்துக்கும் நடைபயணம் மேற்கொண்டு , கிராமம் கிராமமாக பயணம் செய்து சாயி அற்புதம் குறித்து பிரசாரம் செய்து வந்த நரசிம்மசுவாமியின் தொய்வற்ற முயற்சிகள்தான்.


அவர் சிறியதோ இல்லை பெரியதோ என்ற பாகுபாடே இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்தார். ஆகவே நாம் சாயிநாதருக்கு நம் பணிவான வணக்கங்களை தெரிவிப்பதற்கு முன் அவருடைய ஆத்மார்த்தமான சீடரான நரசிம்மசுவாமிக்கும் வணக்கங்களை செலுத்துவது அவசியம். ஆமாம் அந்த நரசிம்மசுவாமி யார், அவருடைய பெற்றோர்கள் யார், இந்த அளவு அவரால் எப்படி சாயிநாதர் பிரச்சாரம் மேற்கொள்ள முடிந்தது என்ற அனைத்துக்கும் விடை காண நான் செய்த முயற்சியே இந்த கதை. 

இனி தொடர்ந்து வரும். படியுங்கள்.

நன்றி:
http://shirdisaibabatamilstories.blogspot.in

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...